சென்னை: இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு உள்ள சிறையாக கருதப்படுவது திகார் சிறை. மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, எட்டாவது பட்டாலியன் போலீசார், டெல்லி போலீசார், உள்ளிட்ட காவல் படைகள் சிறையில் உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிறையில் கடந்த இரண்டாம் தேதி (மே 2) டெல்லி திகார் சிறை எண் 8ல் அடைக்கப்பட்டிருந்த கைதி கும்பலுக்கும், சிறை எண் 9ல் அடைக்கப்பட்டிருந்த ஒரு தரப்புக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் திகார் சிறையில் தில்லு தாஜ்பூரியா என்ற கைதியை, மற்றொரு கும்பலை சேர்ந்த யோகேஷ் துண்டா மற்றும் சிலர் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
அவரை சிகிச்சைக்காக டெல்லி தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வார்டில் மோதிக்கொண்ட இரு கும்பல்களையும் பிரிக்கும் வார்டின் இரும்பு கிரில் கம்பிகளை உடைத்து தில்லு தாஜ்பூரியாவை தாக்கியுள்ளனர்.
குறிப்பாக துண்டா என்கிற யோகேஷ் மற்றும் தீபக் என்ற தீட்டர் ஆகியோர் சேர்ந்து தாக்கினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்கான காரணம் இதற்கு முன், செப்டம்பர் 2021 இல், ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற அறைக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோகி என்கிற ஜிதேந்தர் மான் கொல்லப்பட்டதில் முக்கிய நபர்களில் ஒருவர் தில்லு தாஜ்பூரியா ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு மூளை காரணமாக செயல்பட்டவர் தில்லு தாஜ்பூரியா என்பதால் பழிவாங்கும் நோக்கில் தற்போது அவர் சிறையில் எதிரி கும்பலால் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற போது சிறையில் வெளிப்புற பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக காவல்துறையினர் சிறையினுள் நடந்த கலவரத்தை தடுக்காமல் இருப்பது திகார் சிறையில் உள்ள சிசிடிவி காட்சியில் பாதிவாகி உள்ளது.
இதுகுறித்து சிறை துறை நிர்வாகம் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் விளக்கம் கேட்டனர். மேலும் இதுதொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட தமிழக காவல்துறையின் நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறை இயக்குனருக்கு சிறைதுறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கலவரத்தை தடுக்க தவறிய தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட 8 காவலர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஏன் அதை தடுக்கவில்லை என தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட பொழுது திகார் சிறையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து பல்வேறு காவல் படையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் குறிப்பாக தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் பணியானது சிறையின் வெளிப்புறத்தில் மட்டுமே கண்காணிப்பது ஆகும். மேலும் சிறைவாசிகளிடம் திடீர் ஆய்வு நடத்துவதற்கும், அவ்வப்போது தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.
பொதுவாகவே சிறைக்குள் கொடுங்காயம் ஏற்படுத்தும் வகையில் ஆயுதம் வைத்திருப்பதற்கு காவல்துறையினருக்கும் சிறை அதிகாரிகளுக்கும் அனுமதி இல்லை. வெறும் லத்தி மட்டுமே அதிகபட்சமாக பயன்படுத்த முடியும். சம்பவத்தன்று கொலையாளிகள் கூர்மையான ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த பொழுது வெறும் கையால் காவலர்கள் அவர்களை தடுக்க முடிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே தான் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்திருப்பார்கள், மேலும் வெளிப்புற பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் ஆறு பேரும் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்தபோது கலவரமாக மாறி இருந்தது. எனவே தான் உடனடியாக அவர்களால் எந்தவித எதிர் நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போயிருக்கும்.
இருப்பினும் கண்ணெதிரே ஒரு நபர் கொலை செய்யும் அளவுக்கு தாக்குதலுக்கு உள்ளாகும் பொழுது அதை உடனடியாக தடுத்து இருக்க வேண்டும், அல்லது தடுப்பதற்கான முயற்சியிலாவது ஈடுபட்டிருக்க வேண்டும். இதனை செய்யத் தவறியதால் தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஆறு பேர் மற்றும் மேலும் இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் என எட்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
பொதுவாகவே சிறைகளில் கைதிகளின் மீது கை வைப்பதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ காவலர்கள் தயங்குவதற்கான காரணம் சிறைவாசிகள் சட்டரீதியாக காவலர்கள் மீது பொய் புகார் அளிப்பது வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்ட சிறைவாசிகள் அவர்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டால் அதை தடுப்பதற்கு போதுமான ஆயுதங்கள் காவலர்களுக்கு சிறைவாசிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
எனவே வெளிநாடு சிறைகளில் சிறை காவலர்களுக்கு வழங்கப்படுவது போல் காயம் ஏற்படுத்தாத வகையில் அதே சமயம் சிறைவாசிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எலக்ட்ரிக் ஆயுதங்களை சிறை காவலர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு கமாண்டோ படையின் ஏடிஜிபி ஜெயராமை டெல்லி திகார் ஜெயிலுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி வைத்துள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆறு காவலர்களிடமும், சிறை காவலர்களிடமும் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.