சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு அந்த எண்ணெய் கசிவு ஆற்று நீரில் பாய்ந்து நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழக்குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்தது. இந்த எண்ணெய் கழிவுகளின் கசிவு என்பது எண்ணூர் பகுதி ஆற்றில் மட்டுமல்லாது எண்ணூர் பகுதி சுற்றுவட்டாரத்திலும் பரவி இருந்தது.
குறிப்பாக பக்கிங்ஹாம் கால்வாயில் இந்த எண்ணெய் கழிவு கலந்திருந்ததாலும், மழை பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினாலும் கால்வாய் வழியாக செல்லக்கூடிய மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதன் காரணமாக எண்ணூர் பகுதி மட்டுமல்லாது பக்கிங்ஹாம் கால்வாய் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல குடியிருப்புகளில் இந்த எண்ணெய் கழிவுகள் சூழ்ந்தன.
இதில் சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், பாரதி நகர் என சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளிலும் இந்த எண்ணெய் கழிவு, எண்ணெய் படலமாக சூழ்ந்தது. இதையடுத்து எண்ணெய் படலம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உயர்மட்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, தெரிவித்ததாவது, “எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெயை உறிஞ்சும் பணியில் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து அகற்றப்படும் எண்ணெய் உட்பட அபாயகரமான கழிவுகளை கும்முடிப்பூண்டியில் உரிமம் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படும். எண்ணெய் அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அருகிலுள்ள நாட்டுக்குப்பம் கிராமத்தில் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பல்லுயிர் இழப்புகளை விரைந்து மதிப்பீடு செய்யும் பணிகளும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கால்நடை பாதுகாப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை, தம்முடைய அலுவலர்களை அந்தப் பகுதியிலேயே நிறுத்திவைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து
வருகின்றன” எனத் தெரிவித்தார்.