சென்னை: நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி, "வணிகவரித்துறையில் இம்மாதம் மட்டும் 10,678 கோடி ரூபாய் வருவாயும், இம்மாதம் வரை 76,839 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. மொத்தமாக வணிகவரித்துறையில கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கூடுதலாக 20,529 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் இம்மாதம் மட்டும் 1,131 கோடி ரூபாய் வருவாயும், இம்மாதம் வரை 9,727 கோடி ரூபாய் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது.
மொத்தமாக பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 2,537 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆகிய இரண்டையும் சேர்ந்தது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 23,066 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் போலி ஆவணங்களை கண்டறிவதற்கும் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கும் முதற்கட்டமாக சென்னை திருநெல்வேலி மற்றும் கோவை மண்டலங்களில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்வின் முடிவில் தவறுகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பதிவுத்துறையில் பத்திரங்கள் பதியப்படும் பொழுது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்ந்து சரி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியான நடவடிக்கை அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது" என கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு