சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்ததும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு திமுக ஆட்சிக்கு வந்தால் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தேன். எங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் நல்ல முடிவினை எடுப்பார்.
வன்னியர்களுக்கான தற்போதைய 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சாதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது.
அதன்மூலம் ஒரு வன்னியர் கூட பயன் பெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன்' என்றார்.
இதையும் படிங்க: போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வியாபாரி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்