சென்னை: சட்டப்பேரவையில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கட்சியினரால் எத்தனை காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர்?. 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் வரையும், 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையும், 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2022 ஏப்ரல் வரை அதிமுகவினரால் தாக்கப்பட்ட காவல்துறையினர் பற்றிய முழு விவரங்களும், திமுகவினரால் தாக்கப்பட்ட காவல்துறையினர் பற்றிய முழு விவரங்களும் மாநில உளவுத்துறை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்" என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மண்டல காவல்துறை ஐஜிக்களுக்கும், காவல் ஆணையர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இமெயில் மூலமாக விவரங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏப்ரல் 29 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று இரவு ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்த போது, அங்கு குடியிருப்போரிடம் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொது நாட்குறிப்புப் பதிவேடு, தீ விபத்து மற்றும் பிற விபத்துப் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, இந்த ஆய்வுகளில் பெறப்பட்டுள்ள உள்ளீடுகள் அந்தத் துறைகளின் மானியக் கோரிக்கையில் எதிரொலிக்கும் என முதலமைச்சர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார். அத்துடன் கூட்டம் நிறைவடையும்.
இதையும் படிங்க: 'வாத்தி ரெய்டு... வாத்தி ரெய்டு' - அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு