சென்னை பல்லவன் இல்லத்துக்கு அருகேயுள்ள மத்திய பணிமனையில் மாநகரப் பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றன. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் போக்குவரத்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மொத்தமுள்ள 22 ஆயிரம் பேருந்துகளில் தற்போது 6,090 பேருந்துகள் இன்று (செப்.1) முதல் இயக்கப்படுகின்றன. புறநகர் பேருந்துகளில் 32 பயணிகளுடனும், நகரப் பேருந்துகளில் 34 பயணிகளுடனும் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் போதிய பாதுகாப்பை அலுவலர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். கரோனா தொற்று அறிகுறி உள்ள ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.
தற்போது பயணிகளின் எண்ணிக்கையை வைத்து குறைவான அளவு பேருந்து இயக்கப்படுகிறது. பின்னர் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இரவு 9 மணி வரை பேருந்து சேவை செயல்படும். நாளை முதல் புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்.
சீட்டுக்கு ஒருவர் மட்டுமே அமர வேண்டும். ஆட்கள் அதிகரித்தால் புதிய பயணிகளை ஏற்றக்கூடாது என விதிமுறை உள்ளது" என்றார்.
மேலும், பேருந்து கட்டணம் உயர்த்தபடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது கட்டண உயர்விற்கு வாய்ப்பில்லை என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்