பெரும்பாக்கத்தில் இருந்து ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதிக்கு சிலர் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனத்தை நிறுத்தாமல் இரண்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்ற நான்கு நபர்களை காவல்துறையினர் ஒரு கிலோ மீட்டர் துரத்திச் சென்றுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கஞ்சாவை கடத்திவந்தது தெரியவந்தது. பிடிபட்டவர்கள் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன்(20), ரூபன்(19), அயனாவரத்தை சேர்ந்த சரன்(24 ), பெரும்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சன்(34) என்பதும், ஆதம்பாக்கம் பகுதி முழுவதும் இவர்கள் தொடர்ந்து பல மாதங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. புறநகர் பகுதியிலும் இவர்கள் கஞ்சா விற்பனை செய்துவந்துள்ளனர்.
மேலும், அவர்களது வீட்டில் பதுக்கிவைத்திருந்த 4 கிலோ கஞ்சாவையும், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, ஆதம்பாக்கம் பகுதியில் வேறு யாராவது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனரா என தனிப்படை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தி.மலையில் 230 லிட்டர் கள்ளச்சாராயம், 178 மதுபாட்டில்கள் பறிமுதல்