சென்னை: நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருடிய வழக்கில் பணிப்பெண் சிக்கினார். திருடியதை ஒப்புக்கொண்டதால் மன்னித்து மீண்டும் அந்தப் பெண்ணை பணியாற்ற நடிகை ஷோபனா அனுமதி வழங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த தளபதி, சிவா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஷோபனா. பரதநாட்டிய கலைஞரான இவர் சென்னையில் நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி முதலிய மொழிப் படங்களிலும் நடித்து பத்ம ஸ்ரீ, கலைமாமணி போன்ற விருதுகளையும் வென்றுள்ளார். இவரது வீடு சென்னை தேனாம்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசா சாலையில் அமைந்து உள்ளது. இந்த வீட்டின் முதல் தளத்தில் ஷோபனாவின் தாயார் ஆனந்தமும், இரண்டாம் தளத்தில் ஷோபனாவும், தரைத் தளத்தில் நடிகை ஷோபனா பரத நாட்டிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயிலை சேர்ந்தவர் விஜயா. இவர் கடந்த ஒரு வருட காலமாக நடிகை ஷோபனா வீட்டில் தங்கி ஷோபனாவின் தாயாரை கவனித்து கொள்ளும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாயார் ஆனந்தம் வீட்டில் வைத்து இருந்த பணம் சிறுக சிறுக காணாமல் போயுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த நடிகை ஷோபனா வீட்டு பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தச் சம்பவம், குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார்.
ஆகையினால் அருகில் உள்ள தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் செல்போன் மூலம் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் நடிகை ஷோபனாவின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணிப்பெண் விஜயா, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுக சிறுக 41 ஆயிரம் ரூபாய் வரை பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் திருடிய பணத்தை வீட்டின் கார் ஓட்டுநரான முருகன் என்பவரிடம் கொடுத்து அவரது கூகுள் பே (google pay) மூலமாக ஊரில் உள்ள விஜயாவின் மகளுக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் வறுமையின் காரணமாக பணத்தை திருடியதாக விசாரணையில் தெரிவித்து உள்ளார். இதையடுத்து திருடிய குற்றத்தை பணிப்பெண் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் நடிகை ஷோபனா புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் பணிப்பெண்ணான விஜயாவை மன்னித்து தொடர்ந்து வீட்டில் பணி செய்ய ஒப்புக்கொண்டு, திருடிய பணத்தை சம்பள பணத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் பெண் காவலர் தற்கொலை.. காதலனை கைது செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!