சென்னை: பல முன்னணி நடிகைகளுக்குப் பின்னணி குரல் கொடுத்தவர், பிரபல டப்பிங் கலைஞரான ஶ்ரீஜா. இவரது மகள் ரவீனா ரவி.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான "ஒரு கிடாயின் கருணை மனு" திரைப்படத்தில் நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு 'காவல் துறை உங்கள் நண்பன்' என்ற திரைப்படம் வெளியானது. நடிகை மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞராகவும் வலம் வருகிறார் ரவீனா. இவர் மாளவிகா மோகன், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீஜாவின் கணவரும், ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரநாத் திடீரென காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் சிகிச்சைப் பலனின்றி காலமானார் எனக் கூறப்படுகிறது.
இவரது இறுதிச்சடங்கு கேரளாவில் நடைபெற உள்ளதாகவும் தெரியவருகிறது. ரவீனாவின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.