சென்னை: போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி மாநகர பேருந்து நேற்று (நவ. 3) சென்று கொண்டு இருந்தது. அப்போது, குன்றத்தூர் சாலையில், கெருகம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பஸ்சின் கூரை மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்து உள்ளனர்.
இதனை பின்னால் வாகனத்தில் வந்த பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு வந்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்றவுடன் கீழே இறங்கி சென்ற அந்த பெண் அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவரிடம் மாணவர்கள் தொங்கி கொண்டு வருகிறார்கள், இப்படியா பஸ் ஓட்டுவது என சரமாரியாக கேள்வி கேட்டு திட்டி உள்ளார்.
பின்னர், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்தபடியும், ஒருமையில் பேசி திட்டியபடியும் கீழே இறக்கி விட்டுள்ளார். மேலும் பஸ்சின் பின் படிக்கெட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இழுத்தும், முதுகில் அடித்து சட்டையை பிடித்து இழுத்து பஸ்சில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.
மேலும், தான் ஒரு போலீஸ் எனக் கூறிய அந்த பெண், மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்ட பின்பு பஸ்சில் இருந்த நடத்துநரிடம், "அரசு பேருந்தை இப்படித்தான் ஓட்டுவீங்களா, பஸ்சில் இவ்வளவு பெண்கள் இருக்கும்போது யாரும் சொல்லலையா”" என அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை ஆவேசமாக அடித்து இறக்கிய பெண், போலீஸ் எனக் கூறியதால், அவரை போலீசார் விசாரித்ததில் அவர் நடிகையும், வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் என தெரிய வந்தது. மாணவர்களை அடித்து, பஸ் டிரைவர் மற்றும் கண்டெக்டரை ஒருமையில் பேசி திட்டியதால் நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் மாணவர்களை அடிக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் தம்பதி வெட்டிக்கொலை.. பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது..காதலிப்பது குற்றமா என உறவினர்கள் கதறல்?