சென்னை: நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை 2வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்.
நடிகை பார்வதி நாயர் கடந்த அக்.20 ஆம் தேதி தனது வீட்டில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் தனது வீட்டிலிருந்து ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இரு கைக் கடிகாரங்கள், ரூ.50,000 மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்பட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடி விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அத்துடன் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்த நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை பார்வதி நாயர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டி நேற்று (நவ.26) மற்றொரு புகாரையும் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது வீட்டில் கடந்த அக்.15 ஆம் தேதி விலையுயர்ந்த பொருட்கள் திருடுபோன சம்பவம் தொடர்பாக அக்.20 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்கில் இளங்கோ, சுபாஷ் சந்திரபோஸ், விஜய், அமல் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சுபாஷ் சந்திரபோஸ் மட்டும் தன் மீது தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதோடு, தனிப்பட்ட முறையில் தன்னை மிரட்டியும் வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், சுபாஷ் தன்மீது தவறில்லை என்பதை நிரூபிக்க விசாரணைக்கு மற்றவர்களைப்போல், ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம். ஆனால், சுபாஷ் தன்மீது தவறான வதந்திகளைப் பரப்பும் நோக்கில் தொடர்ந்து யூடியூப் மூலம் வீடியோ வெளியிட்டு வருவதாகவும், தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு தொடர்ந்து மிரட்டல்கள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், தான் கஷ்டப்பட்டு சினிமா துறையில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னேறுவதைத் தடுத்து அழிக்கும் வேலைகளை சுபாஷ் சந்திரபோஸ் தொடர்ந்து செய்து வருவதாகவும், இதில் சுபாஷ் சந்திரபோஸின் பின்னால் வேறு யாரோ இருக்கிறார்கள் என, தான் சந்தேகிப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அத்துடன், தனக்கு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளதாகவும், தொடர் மிரட்டல்களாலும், வதந்திகளாலும் தன் சினிமா வாழ்க்கையை அழிக்க நினைக்கும் சுபாஷ் சந்திரபோஸ் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் காவல் ஆணையரை சந்தித்து மீண்டும் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: பாகுபாடு பார்க்கிறாரா ஏ.ஆர்.ரகுமான்? - சர்ச்சையான இன்ஸ்டா பதிவு!