சென்னை: கார் லோன் வாங்காமலேயே வாங்கியதாக கூறி வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து வருவதாக சின்னத்திரை நடிகை நிலானி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து போலீஸ் சீருடையில் வீடியோ வெளியிட்டு கைதானவர் நடிகை நிலானி.
அதன் பிறகு குடும்ப பிரச்னையில் சிக்கி சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து திருடாதே, தென்றல் உள்பட 13 டிவி தொடர்களில் நடித்துள்ளார் நிலானி. தெரு நாய்கள், காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் உள்பட சில திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
தற்போது டிவி தொடர்களில் பிஸியாக நடித்து வரும் நிலானி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். கடன் வழங்கும் (Piramala pitalandhom) தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் நடிகை நிலானியிடம் பேசி உள்ளார். குறைந்த வட்டிக்கு கார் லோன் தருவதாகவும், அதனை ஆன்லைன் மூலமாக பெறலாம் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பி அவர் மாதந்தோறும் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் உள்பட பிற விவரங்களை கேட்ட போது, நிதி நிறுவன ஊழியர், முதலில் ஆன்லைனில் லாக் இன் செய்தால் தான் தெரியும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சொகுசு காரில் சென்று திருட்டு.. ஆடு, மாடுகள் தான் டார்கெட்.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி?
அதற்கு சம்மதித்த நடிகை நிலானி லாக் இன் செய்த பிறகு வட்டி தொகை அதிகமாக இருந்ததால் தனக்கு கார் லோன் வேண்டாம் என்று கூறி நிதி நிறுவன ஊழியரிடம் நிராகரித்து விட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு நடிகை நிலானிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.
உங்களது லோன் ரூ. 8.80 லட்சம் கிரெடிட் ஆகி விட்டதாகவும், அதற்கான வட்டி தொகை 10,998 ரூபாய் கட்டுங்கள் என்றும் வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நிலானி நிதி நிறுவன மேலாளரை தொடர்பு கொண்ட போது அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் நிலானி வங்கியிலிருந்து நிதி நிறுவனம் 10ஆயிரத்து 998 ரூபாய் எடுத்துள்ளனர்.
கார் லோன் வாங்காமலேயே இது போன்ற நூதன மோசடியை நிதி நிறுவனம் செய்து வருவதாக நடிகை நிலானி குற்றம்சாட்டி உள்ளார். குறிப்பாக அம்பானியின் நிதி நிறுவனத்தில் இப்படி ஒரு மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். நிதி நிறுவனத்தில் இருந்து பேசியவரின் ஆடியோ பதிவையும், வங்கி கணக்கு பரிவர்த்தனை ஆவணங்களையும் அவர் புகாருடன் இணைத்து கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: குடியாத்தம் அருகே கோயிலில் நுழைந்து சாதுர்யமாக திருடிய இளைஞர்: சிக்கியது எப்படி?