சென்னை: பட்டியல் இன மக்களை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மீரா மிதுன்மீது சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஜோ மைக்கல் பிரவீன் என்பவரை மிரட்டிய விவகாரத்தில் காவல் துறையினர் மீரா மிதுனை இரண்டாவது முறையாகக் கைது செய்தனர்.
மீரா மிதுன் மீண்டும் கைது
இந்நிலையில், தற்போது 2020ஆம் ஆண்டில் ஜோ மைக்கல் என்பவரை தாக்கத் திட்டமிட்ட வழக்கையும், 2019ஆம் ஆண்டில் நட்சத்திர விடுதியில் மேலாளரை மிரட்டிய வழக்கையும் காவல் துறையினர் தூசி தட்டியுள்ளனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும் காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இன்று (செப்.03) சட்ட விதிப்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
4 வழக்குகளில் கைது
அதன்படி, புழல் சிறையில் இருக்கும் நடிகை மீரா மிதுன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கைது நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த உள்ளனர். இதுவரை நடிகை மீரா மிதுன் நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பட்டியலின மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவில் காவல் துறையினர் தீவிரமாக உள்ளனர்.
இதையும் படிங்க: தீர்ந்தது சிக்கல்; திட்டமிட்டபடி வருகிறார் தலைவி!