மனு தர்மத்தில் இந்து பெண்கள் கொச்சையாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனைத்தொடர்ந்து இன்றும் பாஜக சார்பாக சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளனர். இதனை மீறி சிதம்பரத்தில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாஜக பிரமுகரான நடிகை குஷ்பூ தனது காரில் சிதம்பரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது முட்டுக்காடு அருகே சென்றபோது மாமல்லபுரம் ஏ.எஸ்.பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் காரை தடுத்து நிறுத்தி குஷ்பூவை கைது செய்தனர். சிதம்பரத்தில் போராட முயன்ற பாஜகவினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பதிவில், " நாங்கள் ஒருபோதும் அராஜகத்திற்கு தலைவணங்க மாட்டோம். பெண்களின் கண்ணியத்தை காக்கும் வகையில் கடைசி மூச்சு இருக்கும்வரை பெண்களின் மாண்புக்காக போராடுவோம்.

விடுதலைச் சிறுத்தைகள் எனது கைதால் மகிழ வேண்டாம். எங்களின் பலத்தை கண்டுதான் கைது செய்துள்ளனர். நாங்கள் எதற்காகவும் பின்வாங்கப்போவதில்லை” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை இல்லை ஏன்? - திருமாவளவன் கேள்வி!