சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த ஜெசிக்கா என்ற பவுலின் தீபா, சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் துணை நடிகையாகவும், இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் வெளியான ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இயக்குநரும், தயாரிப்பாளருமான சிராஜிதீன் என்பவரை பவுலின் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி மதியம் ஜெசிக்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், காதல் கைகூடாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதேநேரம் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் ஜெசிக்கா வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்பி வந்து சோர்வாக வீட்டிற்கு நடந்து செல்வது மற்றும் தற்கொலை செய்துகொண்ட பின் அவரது வீட்டிற்கு, அவரது காதலன் சிராஜிதீனின் நண்பர் பிரபாகரன் முதன்முதலில் வந்ததுமான இரண்டு சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.
எனவே இச்சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகையின் காதலன் சிராஜிதீனிடம் காவல்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப் 25) விசாரணை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது. குறிப்பாக “நடிகை ஜெசிக்கா எனக்கு கடந்த 5 மாத காலமாகத்தான் தெரியும். நான் அவரை காதலிக்கவில்லை. நடிகை ஜெசிக்காதான் என்னை ஒரு தலையாக காதலித்தார்.
மேலும் ஜெசிக்காவிற்கு கை, கால்களில் தோல் தொடர்பான பிரச்னை இருந்தது. இதற்கு அவரது தோழியான பல் மருத்துவர் நித்தியா என்பவர் மூலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பட வாய்ப்புகள் வரக்கூடிய நிலையில், இது போன்று பிரச்னை இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார்.
இது தொடர்பாக மன நல மருத்துவர் மூலமாக ஆலோசனை பெற்று வந்தார். நான் ஜெசிக்காவிற்கு ஐபோனை வாங்கி தரவில்லை. அது ஜெசிக்காவின் ஐபோன்தான்” என்று பல முரண்பட்ட பதில்களையே சிராஜுதீன் அளித்துள்ளார். முன்னதாக சிராஜுதீனின் நண்பர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துணை நடிகை தற்கொலை வழக்கில் மாயமான செல்போன் கண்டுபிடிப்பு