சென்னை: காரைக்குடி அடுத்த கோட்டையூர் பகுதியில் நடிகை கௌதமிக்குச் சொந்தமான 25 கோடி மதிப்புடைய சொத்தை அழகப்பன் அவரது குடும்பத்தினருடன் இணைந்து மோசடி செய்து விட்டதாகக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் அழகப்பன் உட்பட அவரின் குடும்பத்தினர் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக அழகப்பன் உட்பட அவரின் குடும்பத்தினர் ஆறு பேருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆறுமுறை சம்மன் அனுப்பியும் அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஆறு பேரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களைப் பிடிப்பதற்குச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் காரைக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் அழகப்பனுக்குத் தொடர்புடைய வீடு உள்ளிட்ட 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளதாகத் தெரிவித்தது. மேலும் அவரின் வீடுகளில் உள்ள அறைகளுக்குச் சீல் வைத்தனர். இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 3, 6, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை கற்றல் அடைவுத் திறன் தேர்வு!