சென்னை: 4 கோடி ரூபாய் மதிப்பிலான தன்னுடைய சொத்துக்களை அழகப்பன் என்பவர் மோசடி செய்து அபகரித்து உள்ளதாக நடிகை கெளதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கௌதமி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். அந்தப் புகாரில், தனக்கு சொந்தமான நிலங்களை அழகப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மோசடி செய்து அபகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமாவில் நடித்த காலக்கட்டத்தில் தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்ததாகவும் உடல்நிலை பாதிப்பு கருதி, தனது மகளுக்காக சினிமாவில் சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்துக்களை ஒன்று சேர்த்து மகளின் பெயருக்கு மாற்ற முடிவு செய்து அதற்காக சொத்துக்களை வாங்கி விற்கும் அழகப்பன் என்பவரை அணுகியதாகவும் நடிகை கெளதமி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டடம்: மாணவர்களின் உடமைகளை எடுக்க நீதிமன்றம் அனுமதி!
அதனைத்தொடர்ந்து, அழகப்பன் என்பவரிடம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் ஒன்றிணைத்து தனது மகளின் பெயரில் மாற்ற வேண்டும் என தெரிவித்ததாகவும், இந்நிலையில், அழகப்பன் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை ஏமாற்றி மோசடி செய்து அபகரித்துக் கொண்டதாகவும் நடிகை கெளதமி அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தன்னையும், தனது மகளையும் அழகப்பன் மிரட்டி வருவதாகவும் கெளதமி தெரிவித்துள்ளார். தனது சொத்துக்களில் பெரும் பகுதியை விற்கவும், அதில் உள்ள சிக்கலான வேலைகளை தீர்க்கவும் அழகப்பனை நம்பி இருந்தேன் என்றும் ஆனால், அவர் தன்னை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
எனவே அழகப்பன் மற்றும் அவரது மனைவியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையரைச் சந்தித்து புகார் அளித்து உள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது - அண்ணாமலை