பழம்பெரும் நடிகை பானுமதி பெயரில் தாயாரிக்கப்பட்ட 'பானுமதி ராமகிருஷ்ணா' படத்தை இணையத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பரணி ஸ்டூடியோ உரிமையாளரும், பானுமதியின் மகனுமான டாக்டர் பரணி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “எனது தாயார் பானுமதி ராமகிருஷ்ணா பிரபலமான நடிகை. தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். அவர் சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமைகள் கொண்டவராக திரையுலகில் வலம்வந்தவர்.
பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளரின் தந்தையான பி.எஸ். ராமகிருஷ்ணா ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் எண்டெர் டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் 'பானுமதி ராமகிருஷ்ணா' என்ற தலைப்பில் படம் தயாரித்துள்ளது. இப்படத்தை இணையதளத்தில் வெளியிட இருக்கிறது. இந்தப் படம் தொடர்பான ட்ரெய்லர் காட்சிகளில், எனது தாயாரின் இளமை காலத்தில் நடந்த சம்பவங்களை தொடர்புபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்படத்தில் வரும் காட்சிகள், எனது தாயாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக உள்ளது. ஆகவே, 'பானுமதி ராமகிருஷ்ணா' என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது தாயாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் படம் இருப்பதால், ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத் தயாரிப்பாளர்கள் சார்பில், பிரபலமான பெயருக்கு காப்புரிமை கோரமுடியாது, படத்தின் பெயர் பொதுவான ஒன்று என்று வாதிடப்பட்டது. மேலும் படம் மனுதாரர் தாயாரின் வாழ்க்கையை தழுவிய கதையல்ல என்றும் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில் படத்தின் தலைப்பு அவரது தாயாரின் பெயராக இருப்பதுடன், ட்ரெய்லர் காட்சிகள் அவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்று வாதிடப்பட்டது.
வரும் வெள்ளியன்று திரைப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. படத்திற்கு தடை விதித்தால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தினால் படத்தின் பெயரை 'பானுமதி மற்றும் ராமகிருஷ்ணா' என மாற்றி வெளியிடுவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க... உயர் நீதிமன்றம் திறந்து நேரடி விசாரணை நடத்தவேண்டும்- பார் கவுன்சில்