சென்னை: அடையாறு கலாசேத்திரா மாணவிகள் அளித்த பாலியல் புகார் காரணமாக மாணவர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக நடிகை அபிராமி தெரிவித்த கருத்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ''அடையாறு கலாசேத்திரா குறித்து அவதூறு செய்திகளை கேட்டு முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் உணர்வுப்பூர்வமாக குரல் கொடுக்க வந்துள்ளேன். இதன் மூலம் தான் எந்தவித விளம்பரமும் தேடிக் கொள்ளவில்லை. கலாசேத்திரா கல்லூரியைப் பற்றி அவதூறாகப் பேசுவது என்பது, எனது தாயைப் பற்றி பேசுவது போல் உணர்கிறேன். என் தோழி மூலமாக என்னைத் தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்க நிர்மலா என்ற பேராசிரியர் முயற்சித்திருக்கிறார்.
நான் படிக்கும் காலத்தில், அப்போது இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது அவதூறாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை நிர்மலா மற்றும் நந்தினி ஆகிய பேராசிரியர்கள் சுமத்தினர். அத்துடன் படிக்கும் மாணவிகளை காட்டேஜ்களுக்கு அழைத்துச் சென்று தவறாக வழிகாட்டி செயல்படத் தூண்டுகின்றனர்.
இதேபோன்று தற்போது உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் மீது இந்த இரண்டு பேராசிரியர்கள் செய்கிறார்கள். குறிப்பாக மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன் என்பவர், ஹரி பத்மன் கலாசேத்திராவை எடுத்து நடத்த வேண்டும் என்று பாராட்டி, பேசியதன் அடிப்படையில், ஹரி பத்மன் மீது அவதூறு பரப்புவதற்காக மாணவிகளை தவறாக வழிநடத்தி தூண்டி விடுகின்றனர்.
உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் படிக்கும்போது, எனக்கும் என் சக தோழிகளுக்கும் எந்தவித பாலியல் தொந்தரவும் ஏற்படுத்தவில்லை. தற்போது உள்ள மாணவர்களை பலியாடுகள்போல், இந்த இரண்டு பேராசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். கலாசேத்திராவில் அதிகாரத்தைப் பிடிப்பதற்காக இதுபோன்று நடைபெறுகிறது.
இந்த நிறுவனத்தில் அதிகாரம் கிடைப்பதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும், அடுத்தவர்களை குற்றம்சாட்டி வர முடியாது. சமூக வலைதளத்தில் பாலியல் தொந்தரவு குறித்து கருத்து பதிவிட்ட முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் தவறான வழிகாட்டுதல் காரணமாக பதிவிட்டிருக்கலாம்.
ஹரி பத்மன் பேராசிரியராக மிகவும் நல்லவர். அவர் மீது பொறாமை பட்டு இது போன்று குற்றம்சாட்டியுள்ளார்கள். ஹரிபத்மனுக்கு பாராட்டுக்கள் நிறுவனத்தில் கிடைக்க ஆரம்பித்தவுடன் இது போன்று குற்றச்சாட்டுகள் வந்ததுள்ளன. ஹரி பத்மன் முதுநிலை மாணவர்களுக்கு மட்டுமே பாடம் எடுக்கிறார், குற்றம்சாட்டிய 100 மாணவிகளை ஹரி பத்மன் பார்த்துக் கொண்டே இருந்துள்ளாரா?
போராடிய மாணவர்களுக்கு சில சலுகைகளை செய்து தருவதாகக் கூறி, தவறாக வழி நடத்தியதன் காரணாமாக பேராசிரியர் ஹரி பத்மன் மீது குற்றம்சாட்டுகிறார்கள். உண்மையாக பாதிக்கப்பட்ட மாணவிகள் யார் என்பது இதுவரை தெரியவில்லை, எந்தவித ஆதாரமும் இல்லாமல் இந்தியாவில் அடையாளமாக இருக்கும் அடையாறு கலாசேத்திராவை அவதூறு செய்வது தவறு” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, காவல் துறையினர் விசாரித்து தான் பாலியல் தொந்தரவு மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆத்திரமடைந்த நடிகை அபிராமி, ''காவல் துறை எந்த அளவு விசாரணை நடத்தியுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்றார்.
செய்தியாளர் கேள்விக்குப் பதிலளிக்காமல் மழுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாத நேரத்தில் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்பு, ''கலாசேத்திராவில் பாலியல் தொந்தரவு நடக்கவே இல்லை எனத் தெரிவிக்கவில்லை; எனக்கு நடக்கவில்லை'' எனக் கூறினார். ''மாணவர்களை பேராசிரியர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று மீண்டும் தெரியவில்லை’’ என அவர் கூறினார்.
போராடிய மாணவர்களுக்கு சலுகை அளிப்பதாகக் கூறி, இதுபோன்று பாலியல் புகார்களை தெரிவிக்குமாறு தவறாக வழிநடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பேராசிரியர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதை மாணவர்கள் வெளிப்படுத்த பயப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ''சாதி ரீதியாக பாகுபாடு பார்க்கின்றனர், வார்த்தைகளால் தொந்தரவு செய்கின்றனர்'' என மாணவர்கள் குற்றம்சாட்டுவதாக செய்தியாளர் கேட்டதற்கு, அபிராமி பதில் அளிக்க முடியாமல் திணறினார். பின் ''சாதி ரீதியாக பாகுபாடு நடத்தப்படவில்லை'' என நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
சாதி பாகுபாடு குறித்து 2017ஆம் ஆண்டு வரை நடைபெறவில்லை எனவும்; அதன் பின்பு நடைபெற்றால் தானே சென்று கேள்வி எழுப்புவேன் எனவும் கூறிய அபிராமி, மாணவர்களின் குற்றச்சாட்டுகளை முழுமையாக தெரியாமல் மழுப்பலாகப் பேசி திணறினார். ''மாணவர்கள் தவறாக நடக்கும் பொழுது கண்டிப்புடன் செயல்பட்டதற்காக சாதாரணமாக கூறியதை பெரிதாக்கியுள்ளார்கள்'' என தெரிவித்துள்ளார். ''என்னை உடல் ரீதியாக கேலி செய்த போதும் கூட சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்'' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கலாசேத்ரா கல்லூரி விவகாரம்.. பேராசிரியைகளுக்கு தொடர்பு.. ஹரிபத்மன் மனைவி பரபரப்பு புகார்..