சென்னை: நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அடுத்த நாள் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இதையடுத்து ஏப்ரல் 17ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தடுப்பூசியால் மரணம்?
கரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான் விவேக் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது. மருத்துவமனை நிர்வாகமும், தமிழ்நாடு சுகாதாரத் துறையும் தடுப்பூசியால் அவர் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
![நடிகர் விவேக் மரணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-actor-vivek-nhrc-notice-script-7204807_10092021173711_1009f_1631275631_603.jpeg)
ஒன்றிய அரசுக்கு கடிதம்
இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையம் இன்று (செப்.10) ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
![தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-actor-vivek-nhrc-notice-script-7204807_10092021173711_1009f_1631275631_559.jpeg)
அதில், " சமூக ஆர்வலர் சரவணனின் புகார் மனு மீது எட்டு வாரத்திற்குள் விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையை புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி போடவில்லை என்றால் கட்டாய விடுமுறை - அரசு ஊழியர்களுக்கு செக்