சென்னை: நடிகர் விஷால் தனது 46வது பிறந்தநாளையொட்டி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோம் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினார். முதியோர் இல்லம் வந்த நடிகர் விஷாலை வரவேற்ற கன்னியாஸ்திரிகள் மற்றும் காப்பகத்தில் இருந்த உறவினர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் கூறியதாவது, முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடுவது கடவுளிடம் நேரில் வாழ்த்து பெறுவது போல் உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு குறித்து மக்கள் தான் கூற வேண்டும்” என்றுக் கூறினார். மேலும் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வருவது குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்துக்கு 45 வருடத்துக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டம். அவர் 45 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக உள்ளார். இந்த வயதிலும் அவர் நடிப்பது எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர் ஓய்வெடுக்கலாம். ஆனால் மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என நினைப்பது தான் சூப்பர் ஸ்டாருக்கான அர்த்தம்.
“நடிகர் சங்க தேர்தல் கோரிக்கைகளில் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றிவிட்டோம்.
கடைசி கோரிக்கையான நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக மக்களுக்கு முக்கியத்துவமான பெருமையான கட்டிடமாக, கலாச்சார மையமாக இருக்க வேண்டும் என்பதால் தான் தாமதமாகிறது. எம்ஜிஆர், கலைஞர் சமாதி போன்று மக்கள் பார்க்க வர வேண்டும் என நினைக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்று கூறினார்.
தேசிய திரைப்பட விருதுகள் குறித்த கேள்விக்கு, “தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4 பேர் அமர்ந்து ஒருவருக்கு அளிக்கலாம். எனக்கு விருது அளிப்பது ரசிகர்கள் தான். ஒரு குழு சார்ந்த ஆலோசனை தான் தேசிய விருதுகளின் பட்டியல். அரசியல் என்பது துறையோ, தொழிலோ இல்லை அது சமூக சேவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி மக்களுக்கு தேவையான சேவையை செய்ய வேண்டும் அது தான் அரசியல்.
படப்பிடிப்புக்கு செல்லும் ஊர்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது” என்று கூறினார். நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் விஜய் அரசியலுக்கு வரட்டும். விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அவருக்கு ஆரம்பகாலத்தில் கிடைத்த விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்ற தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். எனக்கு தெரிந்த ஒரே விஜய் இளைய தளபதி விஜய் தான். அவரது ரசிகன் நான் என பெருமையாக சொல்வேன்.
ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள். வாக்காளராக அவர் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு எனது வாழ்த்துகள். நானும் 25 வருடமாக இயக்குநராக வேண்டும் என நினைத்து வருகிறேன். நானும் இயக்குநராக வேண்டும் என என்னை ஜேசன் சஞ்சய் ஊக்கப்படுத்தி உள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Thani Oruvan 2: ஏஜிஎஸ் வெளியிட்ட 'தனி ஒருவன் 2' அப்டேட்.. சென்னையில் 'தனி ஒருவன்' சிறப்பு காட்சியை கொண்டாடிய படக்குழு!