சென்னை: பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை கவுரவிக்கும் வகையில் நடிகர் விஜய் “தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலங்கரையில் இன்று(ஜூன் 17) பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஆரவாரத்துக்கிடையே வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக சாதித்த மூன்று இளம் மாணவ மாணவியரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சான்றிதழ்களுடன் பல்வேறு பரிசுகள் வழங்கி அம்மாணவர்களை கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய நடிகர் விஜய், மாணவர்களின் எதிர்காலத்திற்கு கல்வி மட்டும்தான் உதவும் என்றும் அசுரன் படத்தில் வெளியான வசனமான “ காடு இருந்தால் பிடிங்கிக் கொள்வார்கள், ரூபாய் இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், ஆனால் படிப்பிருந்தால் யாராலும் ஏதும் செய்ய முடியாது.” அதனால் அனைவரும் கல்வியை பற்றி கொள்ளவும் கல்வி கற்பதின் ஆழத்தையும் உணர்த்திப் பேசினார். பின்னர் வாக்களிப்பு மற்றும் அதன் உரிமை குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நிகழ்ச்சி முடிந்து நான் சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறேன். பொதுத்தேர்வில் 477 மதிப்பெண் பெற்று தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவது என் கனவாக இருந்துவந்த நிலையில், இன்று விஜய் சாரை இந்நிகழ்ச்சியின் மூலம் சந்தித்தது, மதிப்பெண் எடுத்ததனை விட கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை டிவியில் மட்டுமே பார்த்து வந்த விஜய் சாரை இன்று நேரில் சந்தித்தது, அதீத உற்சாகத்தை அளித்தது.
மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் சார் கல்வியின் ஆழத்தை விரிவாக எங்கள் மத்தியில் கூறினார். கல்வியின் முக்கியத்துவத்தை அதன் வீரியம் குறையாமல் எங்களிடம் சேர்த்தார். நிகழ்ச்சியில், மாணவர்கள் எக்காரணத்திற்காகவும் எந்த சூழ்நிலையிலும் சுயக்கட்டுபாட்டை இழக்க கூடாது என அவர் தெரிவித்தது என்னை வெகுவாக கவர்ந்தது” என்று மாணவர் ஒருவர் நிகழ்ச்சிக்கு பின் மனமகிழ்ச்சியுடன் கூறினார் . மேலும் மாணவரின் தந்தை, நடிகர் விஜய்க்கு இந்நிகழ்ச்சி மற்றும் கனிவான உபசரிப்பிற்கு தன் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சத்தியமங்கலத்தைச் சார்ந்த மற்றொரு மாணவி கூறும் போது, “10ஆம் பொதுத்தேர்வில் 500 மதிப்பெணுக்கு 498 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்தும் அதற்கான அங்கீகாரம் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. அது என்னை அதிகளவில் பாதித்தது. அப்போது தான் விஜய் சாரின் இந்த விழாவின் அழைப்பு வந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் சாரிடம் இது பற்றி தெரிவித்த போது, மேடையில் இது குறித்து அறிவித்து என்னை பாராட்டி கவுரவப்படுத்தியது, பாராட்டிற்கான ஏக்கத்தை பூர்த்திப்படுத்தியது”எனக் கூறினார். மேலும் மாணவியின் தந்தை தன் மகளுக்கு இப்படியான சிறப்பை பரிசாக கொடுத்தற்கு நன்றியையும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவரது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும், விஜய் அரசியலுக்கு வருவரா மாட்டாரா என மக்கள் மத்தியில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வித்தத்தில் இந்த நிகழ்ச்சி அமையும் என விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மத்தியில் பரவலாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் கருத்து கேட்ட பொழுது, இந்த நிகழ்ச்சி அரசியலுக்காக அரங்கேற்றப்படவில்லை என்றும் மாணவர்களின் சாதனையை கவுரவிக்கவே இது நடத்தப்பட்டது என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் தெரிவித்தனர். மேலும் சிலர் நடிகர்களை பார்த்து மாணவர்கள் தவறாக செல்கின்றனர் என கருத்து தெரிவித்து கொண்டிருந்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்ததாகத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் வாக்களிப்பு உரிமை மற்றும் கல்வி குறித்த கருத்துக்கள் மற்றும் பெரியார், அம்பேத்கரின் மேற்கோள்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெருமளவில் வரவேற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆட்சி சிறப்பாக அமையும் என்றும் ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அனல் பறக்க கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாளைய வாக்காளர்களே... புதிய தலைவர்கள் வருகிறார்கள் - நடிகர் விஜய் பேச்சு