சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பாடலின் விரிகள் விவாத பொருளாகவும் மாறின.
இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்.30) சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தயாரிப்பு நிறுவனம் திடீரென ரத்து செய்தது. இது நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.
அதுமட்டுமின்றி வேறு எந்த வித ப்ரி ரிலீஸ் (Pre-release) நிகழ்ச்சிகளும் இன்றி, 'லியோ' திரைப்படம் நேரடியாக திரைப்படங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெற்று வரும் காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் பேசியதாக போலியான ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி, வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், “தமிழக விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் இப்போது நடந்து வரும் காவிரி விவகாரம் தொடர்பாகவும், நடிகர் சித்தார்த்தை தாக்கிய கன்னட அமைப்புகளை கண்டித்தும், தனது 'லியோ' படத்தை கர்நாடகாவில் வெளியிடப்படவில்லை” என்று விஜய் சொல்வது போன்று அந்த ஆடியோ அமைந்துள்ளது.
மேலும், “கர்நாடக அரசு இத்தகைய செயல்களை திரும்ப திரும்ப செய்துவரும் பட்சத்தில் 2026ஆம் ஆண்டு மிகப் பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும்” என்றும் அந்த ஆடியோவில் நடிகர் விஜய் பேசுவது போல் இடம் பெற்று இருந்தது. கர்நாடகவில் நிலவி வரும் போராட்டங்களுக்கு மத்தியில், தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவரான விஜய் பேசியது போல அமைக்கப்பட்ட ஆடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) முறையை பயன்படுத்தி ஏராளாமான விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதை பயன்படுத்தி நடிகர் விஜய் பேசுவது போலவே, போலியான ஆடியோ ஒன்றை தயார் செய்து, அதை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாக கூறப்படுகின்றன.
நடிகர் விஜய், லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் 'லியோ' திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 900 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மார்க் ஆண்டனி படத்தின் சென்சார் போர்டு ஊழல் விவகாரம்! நடிகர் விஷால் கொடுத்த அப்டேட்!