நடிகர் சூரி 2015ஆம் ஆண்டு 'வீரதீர சூரன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், சூரிக்கு தர வேண்டிய சம்பள தொகையான 40 லட்ச ரூபாயை வழங்காமல் இருந்துள்ளார். சம்பள தொகைக்கு பதிலாக சூரிக்கு சிறுசேரி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் ஐந்து கோடி ரூபாய்க்கு விலை பேசி சமபளத்தொகை போக மீதியை தரும்படி கேட்டுள்ளனர். அதன்படி சூரி அந்த மனையை சென்று பார்த்துள்ளார்.
பின்னர் மனைக்கு சரியான பாதை இல்லை என்றும், குறைவாக விலைக்கு இடத்தை வாங்கி அதிகமாக விலைக்கு ஆவணங்களை போலியாக தயாரித்து தன்னை ஏமாற்றியதாகவும் கூறி தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனையடுத்து 2018ஆம் ஆண்டு குறிப்பிட்ட தொகையை அன்புவேல் ராஜனும், ரமேஷ் குடவாலாவும் திரும்ப வழங்கியுள்ளனர். அதுபோக மீதமுள்ள சுமார் 2.70 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றியதாக சூரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அடையாறு காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தினர். பின்னர் இந்த மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி தொடர்புள்ளதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குறிப்பிட்ட இடம் மனை நிலம் என சான்றிதழ் அளித்த சிறுசேரி கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பரத்தை அடையாறு காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். ஏகாம்பரத்திடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்படும் ஏகாம்பரத்தின் சகோதரர் வெங்கடேசனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இது தவிர தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன், முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 26ஆம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.