சென்னை: நடிகர் சிவகுமார், திருக்குறள் 100 என்ற தலைப்பில் வள்ளுவர் வழியில் வந்தவர்கள் வரலாற்றுடன் குறள் என்ற வீடியோ தொகுப்பை உருவாக்கியுள்ளார். அதில், தன்னுடைய வாழ்விலும், நாட்டிலும் நடந்த சம்பவங்களையும் சம்பந்தப்பட்டவர்களையும் திருக்குறளுடன் ஒப்பிட்டு அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இதற்கான செய்தியாளர் சந்திப்பானது சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசியபோது, “சினிமா பார்க்கும் உங்களுக்கு இது போன்ற விளக்கம் உங்களுக்கு புது அனுபவமாக இருந்திருக்கும். இந்த திருக்குறள் விளக்கம் போன்று இதுவரை உலகத்தில் யாரும் பண்ணியதில்லை என்று சொல்கிறார்கள்.
64 வயதில் இனிமேல் மேக்கப் போட்டு நடிக்க கூடாது என்று முடிவு செய்தேன். சினிமாவில் நடித்த நிறைவை விட நான் வரைந்த ஓவியங்களும், என் பேச்சுக்கள் மட்டுமே நிறைவை தரும், நிலைத்து நிற்கும். நான் நடிகராக ஏற்றுக் கொண்டது சிவாஜி கணேசன், கமல் ஹாசன் மட்டுமே. என்னைக் கூட அந்த வரிசையில் வைக்கவில்லை.
சிலப்பதிகாரத்தில் எனக்கு சில கேள்விகள் உண்டு. கோவலனுக்காக மதுரையை எரிப்பதற்கு அவன் என்ன உத்தமனா, மன்னன் செய்த தப்பிற்கு மதுரை என்ன செய்யும். அதனால் என் குழப்பம் தீரும் வரை சிலப்பதிகாரத்தை பற்றி நான் பேசப்போவதில்லை. திருவள்ளுவர் பற்றி கூறினால் முதலில் அவருக்கு உருவமே இல்லை. அவரை வள்ளுவராக ஏற்றுக் கொண்டோம் அவ்வளவுதான்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு எங்கள் நாடு; ஆளுநர் கருத்துக்கு சீமான் பதில்