சென்னை: காவல்துறையின் அழைப்பை ஏற்று எழும்பூரில் அமைந்துள்ள காவலர் அருங்காட்சியகத்தை, இன்று(அக்.16) நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பின்னூட்டம் அளிக்கும் புத்தகத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது கருத்தினைப் பதிவுச் செய்தார். அதில், “இந்தகைய சிறப்புமிக்க காவலர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட என்னை அழைத்தமைக்கு நன்றி.
தந்தையை எண்ணிப் பெருமை
இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு காவல் மற்றும் சிறைத்துறையின் பல்வேறு சாதனைகளை அறிந்து பெருமைப்படுகிறேன். மேலும் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய எனது தந்தையை எண்ணி பெருமைகொள்கிறேன்.
இந்த அருங்காட்சியகம் எனது தந்தையுடனான சிறு வயது அனுபவங்களை நினைவுபடுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டபின் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவலர் அருங்காட்சியகம் என்பதை கேள்விப்பட்டவுடன், அதில் என்ன இருக்கும் என்பதை காண ஆர்வமாக இருந்தது.
நானும் ஒரு காவலரின் குடும்பத்தில் இருந்து வந்தவன்தான் என்பதால், தன்னை காவல்துறை சார்பில் பார்வையிட அழைத்ததை ஏற்றுக் கொண்டேன்.
ஆச்சரியப்பட வைக்கும் அருங்காட்சியகம்
அதுமட்டுமல்லாமல் காவல்துறையில் சேர வேண்டும் என்ற லட்சியமுடையவர்கள் நிச்சயம் வந்து பார்க்க வேண்டிய இடமாக இந்த காவலர் அருங்காட்சியகம் உள்ளது. காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்கள், தகவல்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்குப் பணியாற்றும் ஊழியர்களால் ஒவ்வொரு விஷயங்களும் சிறந்த முறையில் விளக்கப்படுகின்றன. தன்னை காணுவோரை நிச்சயம் இந்த அருங்காட்சியகம் ஆச்சரியப்பட வைக்கும். இந்தக் காவலர் அருங்காட்சியகத்தை அனைவரும் கட்டாயம் பார்வையிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'ஆர்டிக்கிள் 15' ரீமேக்: உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் வெளியீடு