சென்னை: அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அதில் 22 பேரை கைது செய்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
அதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியப்பட்டு, அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வந்தனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், மோசடி வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி, ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இதனிடையே ஆர்.கே.சுரேஷ்-க்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக்அவுட் நோட்டீசும் பிறப்பித்தனர்.
இதை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கின் விசாரணையின்போது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில், நீதிமன்றத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலை மறைவாக இருந்து வந்தனர். அவர்களை பிடிப்பதற்கு பொருளாதார குற்ற போலீசார் கடந்த ஒரு வருடமாக நடவடிக்கை எடுத்து வந்தது.
இதற்காக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மத்திய உள்துறை அதிகாரிகள் மூலம் துபாயில் உள்ள நபர்களைப் பிடிப்பதற்கு இன்டர்போல் உதவியை நாடினர். அதன் அடிப்படையில், துபாய் போலீசாருடன் எம் லாட் என்ற ஒப்பந்தம் போடப்பட்டு, அவர்களை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வந்த நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாயில் வைத்து சமீபத்தில் கைது செய்து, அவரை சென்னை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஆர்.கே.சுரேஷைப் பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தான் டிசம்பர் 12ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகிறேன். அதுவரை என்னை கைது செய்ய வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் நேரில் ஆஜராகும் வரை கைது செய்ய வேண்டாம் என தெரிவித்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே சுரேஷிடம், விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களிடம் ஆர்கே சுரேஷ் தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், ஆர்கே சுரேஷ் சென்னை அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி வேல்முருகன் விசாரணை நடத்தி வருகிறார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், தான் தலைமறைவாகவில்லை என்றும், விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்றும் கூறினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆர்.கே சுரேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஆர்கே சுரேஷ் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் பிடிபட்டது எப்படி? 99.5 சதவீத நகைகள் மீட்பு.. துணை காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி!