சென்னை: செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா, கடந்த 2016ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் கலைஞராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி, சங்கத்தின் 35வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், "டப்பிங் யூனியன் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது நடிகர் ராதாரவி என்னை அவதூறாகப் பேசியதுடன், தாக்கி காயப்படுத்தினார். இன்னும் சிலரும் என்னைத் தாக்கினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் நடிகர் ராதாரவி, கதிரவன் பாலு, கவிதா, சரவணன், கோபால், ஜெகதீஷ், கிரிஜா, பிரபு ஆகிய 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் விருக்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் ராதா ரவியின் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 294 பி (ஆபாசமாக பேசுதல்), 323 (சிறுகாயம் ஏற்படுத்துதல்), 354 (மானபங்கம் ஏற்படுத்துதல்), 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டன்சோ மூலமாக வந்த நடிகையின் காணாமல் போன ஐபோன்: எப்படி கிடைத்தது?