நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் நாள் அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்த நிலையில் அவர் கடந்த 17ஆம் தேதியன்று மருத்துவம் பலனின்றி காலமானார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து,சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல்செய்துள்ளார்.
அவரது மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாகப் புரிந்துகொண்டதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டுமென்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லையெனவும், எதேச்சையாகப் பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்துவதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.