தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில் குருக்களாக நடித்து, பிரபலமானவர் மங்கள நாத குருக்கள். இவரும், இவரது குடும்பத்தாரும் இறந்துவிட்டதாகவும், அவர்களது உடலை தகனம் செய்ய பணமின்றி சிரமப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி, சிலர் பண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி
இதையறிந்து அதிர்ச்சியுற்ற மங்களநாத குருக்கள், இன்று (மே.2) சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஃபேஸ்புக்கில் நேற்று (ஜூன்.01) முதல் தானும் தனது குடும்பத்தாரும் கரோனா தொற்றால் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
வசூல் வேட்டை
அந்த வதந்தியை பரப்பியவர்கள், அடக்கம் செய்ய பணமில்லை எனக் கூறி ஒரு நபருக்கு 2,500 ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளனர். என் மீது கொண்ட அன்பின்பால் பலர் இத்தகவலை அறிந்ததும் எனக்கு செல்போனில் அழைத்து பேசினர். சிலர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பணமும் அனுப்பியுள்ளனர்.
உரிய நடவடிக்கை வேண்டும்!
இதனால் நானும் என் குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். இதுபோன்ற வதந்திகளை பரப்பி பணம் சம்பாதிக்கும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளேன். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க:'கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது’ - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்