தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபை கூட்ட விதிகளின்படியும் ஆண்டுக்கு இரு முறை, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர், செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கரோனா தொற்றை காரணம் காட்டி, அக்டோபர் 2ஆம் தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்து, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எந்த முக்கிய காரணமும் இல்லாமல் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது.
ரத்து செய்யப்பட்ட கிராமசபை கூட்டங்களை அக்டோபர் 7ஆம் தேதி நடத்தக் கோரி ஊரக வளர்ச்சி துறை இயக்குநருக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது பொது நலம் சார்ந்த விவகாரம் என்பதால், பொது நல மனுவாக தாக்கல் செய்ய மக்கள் நீதி மய்யத்திற்கு அறிவுறுத்தினார். இந்த ரிட் மனுவை திரும்பப் பெறவும், மக்கள் நீதி மய்யத்துக்கு நீதிபதி அனுமதியளித்தார்.