இந்தியாவில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலில் ஒன்று கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலுக்கு உலகத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஐயப்பனை தரிசிப்பார்கள்.
மேலும், பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்துவார்கள். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த கோவர்த்தன் என்பவர் சபரிமலை ஐயப்பன் கோயில் நுழைவு வாயிலில் வைக்க தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை காணிக்கையாக அளித்துள்ளார்.
இந்த தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் கிரேஷன் என்ற நிறுவனம் நானோ தொழில்நுட்பம் என்ற நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. '24 கேரட் தங்கத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இத்தகடுகளில் இரண்டு அஷ்டலட்சுமி பேனல்கள், இரண்டு புனித சின்னங்கள், இரண்டு துணை பாகங்கள் கொண்ட ஒரு லஷ்மி சின்னம் பதிக்கப்பட்டுள்ளது' என இந்நிறுவனத்தின் இயக்குநர் பங்கஜ் பண்டாரி தெரிவித்தார்.
இந்தத் தகடுகள் இன்று சபரிமலை செல்கிது. அதற்கான பூஜைகள் இன்று அம்பத்தூரில் உள்ள கே லைட் என்ற நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமன், பிரபல ஐயப்ப பக்தி பாடகர் வீரமணி ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் ஜெயராமன, "நான் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். எனது நண்பர் கோவர்த்தன மூலம் இத்திட்டம் குறித்து தெரிந்து பரவசம் அடைந்தேன். இந்தத் தங்க முலாம் பூசிய தகடுகளை நான் பூஜை செய்து சென்னையிலிருந்து சபரிமலைக்கு அனுப்பிவைப்பது இறைவன் எனக்கு கொடுத்த பாக்யம்" என்றார்.