சென்னை: மதுரையை சேர்ந்தவரான நடிகர் ஹரி வைரவன், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக்கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
வெண்ணிலா கபடி குழு மற்றும் குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடிகர் விஷ்ணு விஷாலின் நண்பராக வந்த ஹரி வைரவனின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் ஹரி வைரவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிறுநீரக பிரச்சினைக்கு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் குடும்ப பொருளாதாரம் பாதித்ததாகவும், மருந்து மாத்திரை செலவுகளை கூட சரிகட்ட முடியவில்லை என்றும் தனக்கு உதவிடக் கோரி ஹரி வைரவன் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
நடிகர்கள் சிலர், ஹரி வைரவனின் சிகிச்சைக்கு பண உதவி அளித்தனர். இந்நிலையில், ஹரி வைரவனின் உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோய் பாதிப்பு, உடல் வீக்கம் உள்ளிட்ட கரணங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நடிகர் ஹரி வைரவனின் உடல் சொந்த ஊரான மதுரை கடச்சனேந்தல் முல்லை நகருக்கு கொண்டு செல்லப்பட்ட இறுதிச் சட்டங்குகள் நடைபெற்றன. நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா என்பவருடன் திருமணம் நடைபெற்று 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளார்.
தமிழ்நாடு நடிகர் சங்கம் பொருளாதார ரீதியிலான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஹரி வைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?