மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான நடிகர் கவுதம் கார்த்திக் போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடல், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கவுதம் கார்த்திக் தற்போது செல்லப் பிள்ளை, நவரசம் உட்பட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட கவுதம் கார்த்திக், இன்று (டிசம்பர் 2) அதிகாலை மெரினா வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பில் கவுதம் கார்த்திக் வந்து கொண்டிருக்கையில், அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்து விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கவுதம் கார்த்திக் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து செல்போன் திருடர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். வழிப்பறி கொள்ளையர்கள் கீழே தள்ளி தாக்கியதில் லேசான காயமடைந்த கவுதம் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.