மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் சந்தித்தனர். இச்சந்திப்பில் கமலின் ஆதரவை தங்கள் அணிக்கு வழங்க வேண்டுமென கூறினர்.
இந்த சந்திப்பின்போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி. கணேஷ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் பிரசாந்த், நடிகர்கள் நிதின் சத்தியா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், ரமேஷ் கண்ணா, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பின் செய்தியாளர்களை சந்திக்கையில், நடிகர் கமலை சந்தித்து எங்கள் அணி சார்பில் என்ன செய்யப் போகிறோம் என்று தெரிவித்தோம்.
மேலும் இந்த அணி, அந்த அணி என்பது இல்லை. யாராக இருந்தாலும் கட்டடம் நல்லபடியாக வர வேண்டும் அதுதான் தன்னுடைய எண்ணம் என்று கமல் தெரிவித்தார். தேர்தலுக்கு என்னை அழைப்பதற்கு பதிலாக கட்டட திறப்பிற்கு அழையுங்கள்; அதுதான் எனக்கு வேண்டும் என கமல் தெரிவித்ததாக பாக்யராஜ் கூறினார்.
அதன்பின் ஐசரி கணேஷ் கூறும்போது, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி சார்பில் 27 திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தயார் செய்து கமலிடம் காட்டினோம். அவர் முதல் அறிவிப்பை பார்த்த உடன் ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.