சென்னையில் முதல் முதலில் அமைக்கப்பட்ட கோட்டூர்புரம் மியாவாக்கி காடு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது, இதனை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு அதற்காக ஒரு ஆவணம் வெளியிட்டார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாநகராட்சியில் காலியாக உள்ள இடங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்டும் ஜப்பான் முறையில் மியாவாக்கி காடுகளை அமைத்துவருகிறது மாநகராட்சி. காடு அமைப்பதால் அந்த இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்படுகிறது.
கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க முடியும், சுத்தமான காற்று இதன்மூலம் கிடைக்கப்படுகிறது. 30 இடங்களில் மியாவாக்கி காடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் இடங்களில் அமைப்பது மாநகராட்சியின் இலக்கு. நகரமயமாவதால் காற்று அதிக மாசு அடைகிறது. இந்த அடர்வனம் மூலம் ஓரளவு காற்றை சுத்தம் செய்ய முடியும்.
முதலில் கோட்டூர்புரத்தில் இந்த மியாவாக்கி காடு அமைக்கப்பட்டு சரியாக ஓராண்டு முடிவடைகிறது. இந்த ஓராண்டில் 23,800 சதுர அடியில் 2,160 மரங்கள் இங்கு வளர்க்கப்பட்டிருக்கின்றன. மியாவாக்கி காடுகளை வளர்க்க விருப்பப்பட்டால் மாநகராட்சி பூங்கா துறை அல்லது மூன்று வட்டாரத் துணை ஆணையரைத் தொடர்புகொள்ளலாம்.
கோட்டூர்புரம் மியாவாக்கி காடு அமைக்க 15 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கு அதற்கு ஏற்ப செலவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நகரத்திற்கும் அடையாளச் சின்னங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
ஒரு மொழி, சின்னம் கலந்து பார்க்காமல் நகரத்திற்குப் பெருமைமிகு ஒன்றாகப் பார்க்க வேண்டும். மொழியைப் பார்க்காமல் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் பார்க்க வேண்டும்.
60 ஆயிரம் பெயர்ப் பலகைகளை மாநகராட்சி பராமரிக்கிறது. பெயர்ப் பலகை மீது அசுத்தம் செய்யப்படும் கட்சி அல்லது நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், சேர்த்தல் தற்போதும் ஆன்லைன் மூலம் செய்யலாம்" எனத் தெரிவித்தார்.