சென்னை கோயம்பேடு முனியப்பா நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கன்னியப்பன். இவர், நகை செய்யும் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எதிர்வீட்டில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் இளைஞர்கள் சுமார் எட்டு பேர் வாடகைக்கு தங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு கன்னியப்பன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கும் எதிர் வீட்டில் உள்ள இளைஞர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எதிர்வீட்டு உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கன்னியப்பனை தாக்க முயற்சித்துள்ளதாகவும், அப்போது வீட்டினுள் இருந்த கன்னியப்பன், நகைகளை கழுவுவதற்காக வைத்திருந்த அமிலத்தை ஆத்திரத்தில் எடுத்து தன்னுடன் வாக்குவாதம் செய்த எட்டு இளைஞர்கள் மீது வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமில வீச்சுக்கு உள்ளான எட்டு பேர்களும் கதறி துடித்தனர். இதுபற்றி, தகவல் கிடைத்த கோயம்பேடு காவல் துறையினர் உடனடியாக ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இளைஞர்களை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட கன்னியப்பனை கோயம்பேடு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அமில வீச்சுக்கு உள்ளான கருப்பசாமி, வேல்முருகன் உள்ளிட்ட எட்டு நபர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.
மேலும், தங்களுடைய உடம்பின் முகம், கை, தோள்பட்டை ,மார்பு உள்ளிட்ட இடங்களில் அமில வீச்சுக்கு உள்ளாகி கடுமையான காயத்துடன் இருப்பதாகவும், இந்த நிலையில் நான்கு நாட்கள் மட்டுமே சிகிச்சை அளித்து தங்களை வலுக்கட்டாயமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் தங்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகத்திடம் நாம் கேட்டபோது, "எல்லா நோயாளிகளையும் அவர்களுடைய காயங்கள் முழுமையாக குணமடையும் வரை வைத்து பார்க்க முடியாது. அதற்கு மருத்துவமனையில் இடமும் இல்லை. அமில வீச்சில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அளவு சிகிச்சை அளித்து விட்டோம். இதற்கு மேல் அவர்கள் தானாகவே காயங்கள் ஆறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மருத்துவ உதவிகள் மீண்டும் தேவைப்பட்டால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்து கொண்டு சிகிச்சை பெறலாம்", என்றனர்.