சென்னை: கேரள மாநிலம், வயநாடு பகுதியைச் சேர்ந்த அஜித் ஜோசப்(28) என்பவர் மீது, அவரது மனைவி கடந்த ஆண்டு மானந்தவாடி காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமைப் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வரதட்சணை கொடுமைப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித் ஜோசப்பை தேடி வந்தனர்.
ஆனால், அஜித் ஜோசப் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று விட்டார். இந்த தகவல் கேரள போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதை அடுத்து வயநாடு காவல்துறை கண்காணிப்பாளர் அஜித் ஜோசப்பை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று(ஜன.1) இரவு துபாயிலிருந்து ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, விமானப் பயணியாக வந்த அஜித் ஜோசப்பை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அவர் கேரள போலீசார் ஓராண்டாக தேடி வரும் குற்றவாளி என்பதை அறிந்த அதிகாரிகள், அவரை அறையில் அடைத்து வைத்துவிட்டு கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து கேரளாவில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை வந்து கொண்டு இருக்கின்றனர். குடியுரிமை அதிகாரிகள் அஜித் ஜோசப்பை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: Chennai Metro Rail: 2022-ல் மெட்ரோ பயனர்கள் எவ்வளவு தெரியுமா.?