சென்னை சோழவரம் அருகே போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (அக். 21) மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடங்கி சோதனையிட்டதில் 48 கிலோ மெத்தாம்பெடாமைன் என்ற போதைப்பொருள் சிக்கியது. உடனே அந்த காரில் வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அந்த இளைஞரை அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பன் ராஜி ஆண்டனி என்பது தெரியவந்தது. இதனிடையே விசாரணையின்போதே நள்ளிரவில் ராயப்பன் திடீரென 3ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அதன்பின் அவரை போலீசார் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் விசாரணையில் மரணம் அடைந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், தெலங்கானா மாநிலத்தில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடமும், உறவினரிடமும் தெரிவித்துவிட்டு, ராயப்பன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும், இவர் மீது தெலங்கானாவில் ஒரு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் தனது தொழில் குறித்து குடும்பத்தினருக்கு தெரிந்து விடும் என்கிற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட நண்பரின் வீட்டிலேயே திருடிய காவலர் கைது