தமிழ்நாட்டில் மதுரையில் புதிதாக அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த வாரம் தலைவர், குழு உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியீடு செய்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை குழு உறுப்பினர் பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த மருத்துவர் சுப்பையா சண்முகம் இடம்பெற்று உள்ளார்.
தன்னுடைய வீட்டு குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் பெண்மணி வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இது போன்று செயலில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நபருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் இடமளிக்கக் கூடாது என்று பல்வேறு அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அகில பாரதீய வித்யார்த்தி பர்ஷித் அமைப்பின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெருமாள், தேசிய செயற்குழு உறுப்பினர் திலீபன், கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள் கூறியதாவது:
மருத்துவர் சுப்பையா சண்முகம் திருநெல்வேலி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமத்திலிருந்து நன்றாகப் படித்து மருத்துவராக மாறியது மட்டும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் கடந்த 15 வருடங்களாக முன்னணி அறுவை சிகிச்சை மருத்துவராகச் செயல்பட்டுவருகிறார்.
அப்படி சிறப்பாகச் செயல்பட்டுவந்ததால் மட்டுமே அவருக்கு குழுவில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் தற்போது திருமாவளவன் பெண்களுக்கு எதிராகப் பேசியதற்காக அவர் மீது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றனு. இதனைத் திசை திருப்பவே அரசியல் கட்சிகள் சுப்பையா சண்முகம் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.
இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.
மேலும் சுப்பையா சண்முகம் மீது உள்ள குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு, "அது ஒரு பொய் குற்றச்சாட்டு. அதனால்தான் வழக்கை கொடுத்த நபர்களே வழக்குப்பதிவு செய்து இரண்டு நாள்களில் திரும்பப் பெற்றுவிட்டனர். அவர் சிறுநீர் கழிப்பதுபோல் வெளியான காட்சிகள் தற்போது வரை நிரூபிக்கப்படவில்லை" என்று பதிலளித்தனர்.