இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது,
"2014ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி வழங்கினார். அதற்கு பின் ஐந்தாண்டுகளில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் இந்த ஐந்தண்டுகளில் கால்நடைகளுக்கான கலப்பட தீவனம், வைக்கோல், சோளத்தட்டு உள்ளிட்டவற்றின் விலை மட்டும் 30 முதல் 40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது குறித்து பல முறை தீர்மானமங்களை நிறைவேற்றி வந்தோம். அந்த வகையில் எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தற்போது பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி 32 ரூபாயாகவும், எருமை மாட்டுபால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயாகவும் வழங்குகின்றனர். இதற்கு முதலமைச்சர், பால்வளத் துறை அமைச்சருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
அதேசமயம் இந்த விலை உயர்வு எங்களுக்கு கட்டுபடி ஆகாது என்பதால் பால் கொள்முதல் விலையில் 10 ரூபாயும், விற்பனை விலையில் 10 ரூபாயும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது தான் மாவட்ட ஒன்றியங்கள் அதை சார்ந்து இருக்கக்கூடிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவுகளும் லாபகரமாக செயல்பட முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
அதையடுத்து பால் கொள்முதலில் மூன்று விதம் இருக்கிறது. ஆரோக்யா, திருமலா போன்ற பெரிய பால் நிறுவனங்கள் செண்டர் வைத்து பாலை கொள்முதல் செய்வது ஒரு வகை. பத்தாயிரம் லிட்டருக்கு பாலை சேர்த்து கொள்முதல் செய்து விநியோகித்து வரும் சிறிய நிறுவனங்கள் இன்னொரு வகை. ஒரு விவசாயியின் தோட்டத்துக்கு நேரடியாக சென்று விற்பனையாளர் பால் கறந்து வருவது முன்றாவது வகை. இதில் 18 முதல் 20 ரூபாய்க்கு லிட்டர் பாலை விவசாயி விற்பனை செய்துவிடுவார். இதை அருகிலுள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் கொண்டுவந்து சந்தை விலைக்கு பெருத்த லாபத்துடன் விற்பனையாளர் விற்பனை செய்து விடுகிறார். இங்கு தான் பிரச்னை இருக்கிறது.
இதற்கிடையில் ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு, கால்நடைக்கு தீவனம் வாங்க ரூ.49.80 செலவாகிறது. தற்போது ரூ.4 விலை ஏற்றத்திற்கு பிறகும் எங்களுக்கு ரூ.17 வித்தியாசம் வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் பால் விலை உயர்த்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.