ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு, விற்பனையகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும்; பால் உற்பத்தியாளர்களுக்கும்,விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது. குறிப்பாக, தீவனம்,புண்ணாக்கு போன்ற பொருட்களின் விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4ம், விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6ம் உயர்த்துவதாக, இந்த விலை உயர்வு குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.
![avin milk rate increase ஆவின் பால் விலை உயர்வு ஆவின் பால் விலை உயர்வு இன்றுமுதல் அமல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4174531-_aavin-milk.jpg)
இந்த விலை உயர்வுக்கு தி.மு.க .தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க .தலைவர் வைகோ தொடர்ந்து எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தி.மு.க .தலைவர் ஸ்டாலின் கூறுகையில், " பால் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வின் பெரும்சுமை, தரமான விநியோகத்திற்கான விலை உயர்வு என்பது ஏற்புடைதல்ல. தரமான விநியோகம் செய்வது அரசின் கடமை" என கண்டனம் தெரிவித்தார்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி திமுகவின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, "நீங்கள் போராட்டம் நடத்தவில்லையென்றால், பால் கொள்முதல் விலையை உயர்த்தத் தயார்” என அறிவித்தார். அப்போது பதிலளித்த திமுகவினர், ” முதலில் பால் கொள்முதல் விலையை உயர்த்துங்கள், தாங்கள் அரசுக்கு ஒத்துழைப்போம்” என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. இது சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் மத்தியில், திமுக மீது விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.