ஆவின் பால் விலை உயர்வு கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது.
- ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.6,
- கொள்முதல் செய்யப்படும் பசும் பாலின் விலை ரூ.4,
- எருமைப் பாலின் கொள்முதல் விலை ரூ.6
என உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த பால் விலை உயர்வு ஏழை-நடுத்தர மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிக்கிருஷ்ணண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் உயர்த்தப்பட்ட பால் விலை பொருளாதார ரீதியில் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் ஆவின்பால் விலை உயர்வுக்கான இந்த உத்தரவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், வழக்கு முடியும் வரை பால் விலை உயர்வுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஆவணங்களும் வழக்கில் இணைக்கப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக் செல்பவர்களை திசைதிருப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் டாஸ்மாக் விலை உயர்வை எதிர்த்து ஏன் வழக்கு தொடர்வதில்லை எனவும் கேள்வியெழுப்பினர்.
விலைவாசி உயர்வால் ஒருபுறம் தொடரும் விவசாயிகள் உயிரிழப்பு, மறுபக்கம் விவசாயப் பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கை மனுதாரர் திரும்பப் பெறுவதாக தெரிவித்ததால் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.