சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து, ஒன்றியங்கள் மற்றும் இணைய பால்பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு, தமிழ்நாடெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகிறது.
தற்பொழுது ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டு சராசரி பால் விற்பனையைவிட 3 லட்சம் லிட்டர் அதிகரித்திருக்கிறது. வைட்டமின் A & D செறிவூட்டப்பட்ட பால், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும், கண்பார்வையை மேம்படுத்துவதிலும் மற்றும் எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றது. பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த சத்துகள், எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும். மேலும் உடலுக்குத் தேவையான கால்சியத்தை பெற்றுத் தருவதில் வைட்டமின் D பங்களிப்பதினால், பாலில் வைட்டமின் D செறிவூட்டம் செய்வது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதன் அடிப்படையில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் என சட்டசபை கூட்டத் தொடரில் பால் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை மானியத்தின்போது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில், வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் (பர்ப்பிள் நிற பால் பாக்கெட்) இன்று (மே 9) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் (FSSAI) பாலில் செறிவூட்டுதலுக்காக அனுமதிக்கப்பட்ட அளவில் பால் வகைகளில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் செறிவூட்டம் செய்யப்பட்ட ஆவின் பசும் பால் வகையினை வாங்கி பயன்டுத்துவதினால், உடலுக்குத் தேவையான வைட்டமின் A மற்றும் D கிடைக்கப்பெறும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற +2 தேர்வில் முதலிடம் பிடித்த நந்தினி!