மத்திய பாதுகாப்புத் துறைக்கு தேவையான ராணுவ உடை, பாராசூட் ஆகியவற்றைத் தயாரித்து வரும் ஓ.எப்.சி. நிர்வாகம் தற்போது நாட்டின் அவசர நிலையை கருத்தில்கொண்டு முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் முகக் கவச தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு, இந்த படையுடை தயாரிப்பு தொழிற்சாலையில் முகக் கவசம் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு மேலாடையைத் தயார் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல், கான்பூரில் உள்ள தொழிற்சாலையில் கரோனா வைரஸ் பாதுகாப்பு உடை மற்றும் டென்ட், ஹிட்டார்சியில் உள்ள தொழிற்சாலையில் சானிடைசரும், மேடக் தொழிற்சாலையில் வென்டிலைசர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஆவடியில் மூலப்பொருட்கள் வரும்பட்சத்தில் நாளை முதல் பணிகள் துவக்கப்படும் என ஆவடி படையுடைய தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்த பணியில் சுமார் 100 முதல் 150 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு சமூக விலகலை கடைபிடித்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பான முறையில் தயாரிக்க உள்ளனர்.
போர்காலத்தில் அவசரகதியில் செயல்படும் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகள் தற்போது நாட்டு மக்களுக்காக போராடி வரும் மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் முகக் கவசம் மற்றும் மக்களுக்கான பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலையில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ்!