சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப் பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அமைந்தகரை பகுதியில் தலைமை இடத்தைக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கிளை அமைத்து செயல்பட்டு வந்தது. பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாகக் கூறி மோசடி செய்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை துவக்கினர்.
குறிப்பாக முதலீடு செய்த பணத்தை தங்க வியாபாரத்தில் முதலீடு செய்து இரட்டிப்பாக லாபம் தருவதாக ஆசை வார்த்தைக் காட்டி ஏமாற்றியுள்ளனர். இந்த வழக்கில் சுமார் ஒரு லட்சம் பேரிடம் 2,438 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அதில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகியாக இருந்த ஹரிஷை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் பாஜகவில் உயர் பொறுப்பு பெறுவதற்குப் பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரை வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக நடிகரும், பாஜக ஓ.பி.சி பிரிவு நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் பணம் பெற்றதாக விசாரணையில் அம்பலமானது. முதற்கட்ட விசாரணையில் 5 கோடி ரூபாய் பணத்தை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க வாங்கியதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பியும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாட்டில் தங்கியிருந்தார். பலமுறை நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரம் தொடர்பாக முதல் குற்ற பத்திரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, பொருளாதார குற்றப்பிரிவு. அப்போது, 3000 பக்கம் அளவிலான குற்றப் பத்திரிக்கைகள், ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை அனைத்தையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், ரூசோ என்பவரிடமிருந்து 15 கோடி ரூபாய் பணத்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. துபாயில் தலைமறைவாக இருக்கும் நடிகர் ஆர்.கே.சுரேஷை பிடித்து விசாரணை செய்ய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் குற்ற பத்திரிக்கையில் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். தொடர்ந்து நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரித்து அடுத்து சமர்ப்பிக்கப்படும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக டிஜிபி தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு உயர் அதிகாரிகள் உடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் முகவர்களாக செயற்பட்ட 1500 பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் 500 முகவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த முகவர்கள் 800 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் வசூல் செய்து மோசடி செய்திருப்பதால் அவற்றைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த 500 முகவர்களுக்கு முதற்கட்டமாக சம்மன் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையிலும், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்த விசாரணைக்கு பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை எம்.பி. ஞானதிரவியத்திற்கு திமுக தலைமை நோட்டீஸ்.. காரணம் என்ன?