சென்னை: டெல்லி மாநிலத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் நெருக்கடி நிலை குறித்தும், ஆம் ஆத்மி கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "டெல்லியில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மோடி அரசு 277 சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி உள்ளனர். ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கு ரூ. 20 கோடி கிட்டத்தட்ட கொடுத்துள்ளனர். இதற்காக ரூ. 5500 கோடி செலவு செய்துள்ளனர்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதேபோல் அடுத்து வரும் குஜராத் தேர்தலிலும் உலகமே திரும்பிப்பார்க்கும் அளவிற்கு முடிவுகளை எதிர்பார்க்கிறோம். குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களின் நம்பிக்கை கட்சியாக ஆம் ஆத்மி விளங்கும். அதன் பின் இந்தியா மாறும்.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் பஞ்சாப்பிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலத்திலும் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். அடுத்து நாங்கள் வளரக்கூடாது என்பதற்காகத் தான் எங்களை பாரதிய ஜனதா கட்சியின் B team என காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது.
பாஜக மதத்தை வைத்து இந்துக்களை வைத்தும் ஒரு கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி மீது ஊழல் புகாரை ஆதாரம் இன்றி கூறி வருகிறது. தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியினை வளர்ப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அகில இந்தியா அளவில் சேலத்தில் அடுத்த மாதம் மாநாடு நடைபெற உள்ளது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் 10 இடங்களை தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி பிடிக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
வருகின்ற நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி சரியாக வரும். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், பெண்களின் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.