சென்னை ராயப்பேட்டையிலுள்ள பைலட் லேன் பகுதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். செல்போன் விற்பனைக் கடையில் பணியாற்றிவரும் இவர், தனது மனைவி லதா, தன்னுடைய ஒரு வயது குழந்தை நிக்ஷிதா ஆகியோருடன் வசித்துவருகிறார். லதா இரண்டாவதாக கருவுற்ற நிலையில், ரத்தப்போக்கு அதிகம் இருந்துள்ளது. இதனால் போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் அவரின் கரு கலைக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று அவர் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், மன உளைச்சலில் அவர் தவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இன்று காலை சத்யநாராயணன் பணிக்குச் சென்றவுடன், கதவை தாழிட்டுக்கொண்டு உள்ளே சென்ற லதா, வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன் மீதும் குழந்தை மீதும் ஊற்றி பற்றவைத்துக்கொண்டார்.
வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லதா தீயில் கருகி இறந்து கிடந்துள்ளார். தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய குழந்தையை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். ஆனால், 80 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வயது கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னை: முன்னாள் ரயில்வே ஊழியர் தீக்குளித்து தற்கொலை!