சென்னை: பெங்களூரு இந்திரா நகரைச்சேர்ந்த 67வயது மூதாட்டி ஒருவர், அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்ட் ஒரிகான் நகரில் தொழில் நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வரும் தங்கள் பிள்ளைகளுடன் சென்று தங்கி இருந்தார்.
இந்த நிலையில் அம்மூதாட்டி இதய நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்து அவரது மகன்கள் பெங்களூருவில் உள்ள ஏர்-ஆம்புலன்ஸ் தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர். இதற்காக துருக்கியில் இருந்து அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதிக்கு ஏர்-ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பப்பட்டது. பின், போர்ட்லேண்ட் வந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்தில் 67 வயது மூதாட்டி மருத்துவக்குழுவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
விமானம் போர்ட்லேண்டிலிருந்து ஐஸ்லாந்து சென்று துருக்கி வந்தது. பின்னர் துருக்கியில் இருந்து மருத்துவக் குழுவினருடன் ஏர்-ஆம்புலன்ஸ் விமானம் இன்று(ஜூலை 20) அதிகாலை 2:15 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைந்தது.
இதையடுத்து அம்மூதாட்டிக்கு குடியுரிமை சோதனைகள் நடைபெற்றுமுடிந்தபின், அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். இந்தியாவில் சிகிச்சைப்பெறுவதற்காக நீண்ட தூரம் 26 மணி நேரம் பயணம் செய்த முதல் ஏர்-ஆம்புலன்ஸ் விமானம் இதுவே ஆகும். இந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு மட்டும் கட்டணமாக ரூ.1 கோடி செலவானதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Commonwealth 2022: ஊக்கமருத்து சோதனை - தமிழ்நாட்டு வீராங்கனை நீக்கம்