தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.
இந்நிலையில் கரோனா தொற்று சமூக தொற்றாக மாறிவிட்டதா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்தத் தொற்று சமூக தொற்றாக மாறிவிட்டதா என்று கண்டுபிடிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கோவை , சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அந்தக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. இந்நிலையில் கரோனா குறித்து சுவாதி பிரபாகரன் எனும் பெண், சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டதாவது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது தாயை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு புற நோயாளிகள் பிரிவில் 30 பேர் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், அவரது தாய்க்கு வெப்பநிலை சோதனை செய்ததில் கரோனா தொற்று தொடக்கம் என்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறி அனுப்பியுள்ளனர். மேலும், மாநகராட்சி கூறிய விதிமுறைகளை கூறிவிட்டு பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவைத்தனர். அந்த மருத்துவமனையில் அதிக மருத்துவர்களுக்கு தொற்று இருப்பதாகவும், அவர்கள் பரிசோதனை செய்வதில்லை என்பதையும் கேட்ட அந்தப் பெண்மணி அதிர்ச்சியில் உரைந்துள்ளார்.
இச்சம்பவத்தால் சென்னையில் சமூக தொற்று பரவத் தொடங்கியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி முகக்கவசம் இல்லாமல் சாலையில் திரிகின்றனர். அரசு கரோனா தொற்றில் இருப்பவர்களைக் கண்டறிந்து வருகின்றனர் என்பது வேடிக்கையாக உள்ளது. கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை அரசு கவனக்குறைவாக கையாளுவதாகவும், கரோனா சமூக பரவல் நிலையை தொட்டு விட்டதாகவும் பதிவுசெய்தார்.

இந்தப் பதிவு வேகமாக பரவியது. இந்த பதிவுக்கு பலரும் பதிலளித்து அரசு, மாநகராட்சியை விமர்சிக்கத் தொடங்கினர். இது குறித்து அறிந்த மாநகராட்சி, அந்தப் பதிவு செய்த பெண்மணியை தொடர்பு கொண்டு, அவரது தெரு முழுவதும் கிருமி நாசினி தெளித்து, பிறகு கரோனா உறுதிசெய்யப்பட்ட அவரது தாயை கரோனா கண்காணிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களது குடும்பத்தில் மீதமுள்ள மூன்று நபர்களையும் கரோனா பரிசோதனை செய்வதற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து மீண்டும் ட்விட்டரில் பதிவுசெய்த பெண்மணி, தனது தாய் சிகிச்சை முடித்து வந்ததும், அவரை தனிமைப்படுத்தி நன்றாக கவனித்துக்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனா பரிசோதனைகள் திடீர் குறைப்பு ஏன்?'